இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் கடந்த 1940ஆம் ஆண்டில் விமான தளம் அமைக்கப்பட்டது. இலங்கையின் விடுதலைக்குப் பின்னர் சென்னையிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்ததால், 1983ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
2009இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி, பலாலி விமான தளத்தின் புனரமைப்பு பணிகளை இலங்கையின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் பலாலி விமான தளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.
இந்த விமான தளம் இன்று திறக்கப்பட்டதால், சென்னையிலிருந்து விமான சேவை தொடங்கியது. முன்னதாக, இந்திய தொழில்நுட்ப அலுவலர்கள் அங்கு சென்று விமான ஓடுதளம் குறித்து ஆராய்ந்தனர். இந்த நிலையில் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு தனது விமானப் பயணத்தை ஏர் இந்தியா விமானம் தொடங்கியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது, இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.