கடந்த ஜூன் 23ஆம் தேதி யோகா குரு பாபா ராம் தேவ், ஜெய்ப்பூரிலுள்ள பதஞ்சலி நிறுவனத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில், பதஞ்சலி நிறுவனம் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளது. கொரோனில் எனப் பெயரிடப்பட்ட அந்த மருந்து மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களை மூன்று நாள்களில் குணப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த மருந்தினை நிம்ஸ் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தவர்களுக்குத் தொடர்ந்து ஏழு நாள்கள் கொடுத்து பரிசோதனை செய்தோம். அதில் அனைத்து நோயாளிகளும் பூரண குணமடைந்தனர் எனவும் கூறினார்.
இதையடுத்து, ஆயுஷ் அமைச்சகமும் மத்திய அரசும், மருந்தின் மூலப் பொருள்கள், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் விளக்கம் உள்ளிட்ட பலவற்றிற்கு பதிலளிக்குமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசு ஆய்வு செய்து மருந்து விற்பனைக்கான அனுமதி அளிக்கும் வரை, கொரோனில் குறித்த விளம்பரங்களை நிறுத்தவேண்டும் எனவும் எச்சரித்தது.