ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று ஊடக புகைப்படக்காரர்கள் மீது ஜெகன் அரசு பொய் வழக்கு பதிவுசெய்துள்ளது.
விவசாயிகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அமராவதி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மண்டடம் ZPH பள்ளியில் காவல் துறையினர் தங்கியுள்ளதாகவும் இதனால் பள்ளி மாணவர்கள் வெளியே வெயிலில் அமர வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், காவல் துறையினரை எதிர்த்து பள்ளியின் முன் போராட்டம் நடத்த அங்கு சென்றனர். இந்தப் போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களும் அங்கு சென்றுள்ளனர்.
இப்போராட்டம் குறித்த செய்தியை சேகரித்த மரிடையா, ரமேஷ் சவுத்ரி, கிருஷ்ணா ஆகிய புகைப்படக்காரர்கள் மீது காவல் துறையினர் ஐபிசி 354சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் மரிடையா என்ற புகைப்படக்காரர் ஈநாடு பத்திரிகையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து துணை காவல் துறை கண்கானிப்பாளர் ஸ்ரீலட்சுமி கூறுகையில், "போராட்டங்களின்போது கலவரங்கள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க பல பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மண்டடம் ZPH பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை சுமார் 11.30 மணியளவில் அந்தப் பள்ளிக்கு சென்ற மூன்று புகைப்படக்காரர்கள், ஒரு பெண் காவலர் உடைமாற்றுவதை வீடியோ பதிவு செய்துள்ளனர்" என்றார்.
வெளியே வெயிலில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள் ஆனால், காவல் துறையினரின் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த புகைப்படக்காரர்கள், அங்கு நடைபெற்ற போராட்டம் குறித்த செய்தியை சேகரிக்கவே அங்கு சென்றதாக தெரிவித்தனர். விவசாயிகளின் போரட்டம் தீவிரமைடந்துள்ளதால், பல்வேறு செய்சி சேனல்களை அமராவதி பகுதியில் ஜெகன் அரசு முடக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் குட்டி பாகிஸ்தான் உருவாகிறதா? - பாஜக வேட்பாளரின் சர்ச்சை பேச்சு