ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவான 370ஆவது சட்டப்பிரிவு சென்ற ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. அத்துடன் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் பகுதி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, அம்மாநிலத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டனர். முக்கியமாக முன்னாள் முதலமைச்சர்கள் மெஹ்பூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா,உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதனிடையே உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்னதாக, வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரை வீட்டுக் காவலில் வைப்பதற்கான உத்தரவு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் ஜம்மு - காஷ்மீர் முதன்மைச் செயலாளர் ஷலீன் காப்ரா, மெஹ்பூபா முப்தியின் வீட்டுக் காவலை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு, ஒரு ஆண்டு முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இணைய சேவை முடக்கம் : ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை நடத்த வேண்டாமென மத்திய அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை !