ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆறு முக்கிய அரசியல் கட்சிகள், ஒராண்டுக்கு முன்பு மத்திய அரசின் சட்டப் பிரிவு 370 ரத்தை திரும்பப் பெறக்கோரி, ஒருங்கிணைந்த குரலை எழுப்பினர். இதுதொடர்பாக ஈடிவி பாரத் உடனான ஒரு பிரத்யேக பேட்டியில், தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜம்மு-காஷ்மீரின் மறுசீரமைப்பிற்கு, அவர்கள் எவ்வாறு போராடப் போகிறார்கள் என்பது குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தேசிய மாநாட்டு கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சல்மான் சாகர், கடந்த சில நாள்களாக கட்சித் தலைவர் டாக்டர் பாரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்று வரும் மூத்த தலைவர்களின் சந்திப்பு என்பது காஷ்மீரின் அடையாளத்தை மீட்டெடுக்க பள்ளத்தாக்கின் அரசியல் தலைவர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது என்றார்.
மேலும், "கடந்தாண்டு காஷ்மீரின் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட குப்கர் பிரகடனத்தில் தேசிய மாநாட்டு கட்சி உறுதியாக இருக்கிறது. எங்கள் கட்சி அனைத்து கட்சி தலைவர்களையும், ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறது, இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியும். இது எங்கள் அடையாளத்தை மீட்டெடுப்பது மட்டுமின்றி, மக்களின் கண்ணியத்தையும் காப்பாற்றும் வகையில் இருக்கும்" என்றார்.
இவ்விவாதத்தின் போது, காங்கிரசின் மூத்த தலைவர் குலாம் நபி மோங்கா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியிடன் ரவூப் பட் ஆகியோரும் சாகரின் கருத்துக்களை வழிமொழிந்தனர். கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
குலாம் நபி மோங்கா பேசுகையில், "தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் பாரூக் அப்துல்லா எடுத்துள்ள இந்த முயற்சியை நான் முழுமையாக வரவேற்கிறேன். இந்த அரசியல் உறுதிப்பாட்டை நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம் நாம் மக்களின் அடையாளம் மற்றும் கண்ணியத்திற்காக ஒன்றிணைந்து சிறந்த முறையில் போராட முடியும்.
காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளின் பல தலைவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நமது அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முடியவில்லை. பாஜக-வுக்கு இருப்பதைப் போல் அல்லாமல் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட எந்த வசதிகளும் எங்களிடம் (மற்ற கட்சிகள்) இல்லை.