ராஜஸ்தானில் உள்ள பல்வேறு ஊர்களில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல உத்தரப் பிரதேச அரசுக்கு ஆயிரம் பேருந்துகளை வழங்க, காங்கிரஸ் தயாராக உள்ளதாக மே 16ஆம் தேதி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்தார்.
பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட உத்தரப்பிரதேச அரசு, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகள், நடத்துநர்களின் தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.
அதைத்தொடர்ந்து பேருந்துகளின் தகவல்களை காங்கிரஸ் உத்தரப்பிரதேச அரசுக்கு அளித்தது.
இருந்தபோதிலும், தற்போதுவரை உத்தரப்பிரதேச அரசு, பேருந்துகளை உத்தரப் பிரதேச எல்லைக்குள் செல்ல அனுமதியளிக்காத காரணத்தால் பேருந்துகள் ராஜஸ்தான்-உத்தரப் பிரதேச எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஷேக் சிங்வி கூறுகையில், "இந்திய ஜனநாயகத்தில் கூட்டுறவு கூட்டாட்சிக்கு இடமில்லை என்பது போல பாஜக செயல்படுகிறது. விரைவில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வந்த பேருந்துகளை அனுமதிக்கவேண்டும்" என்றார்.
முன்னதாக, 1000 பேருந்துகளின் விவரங்களுக்கு இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களின் பதிவு எண்களை காங்கிரஸ் வழங்கியதாக உத்தரப் பிரதேச அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு எதிர்த்தார். இவருடன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விவேக் பன்சால் உள்ளிட்ட ஆறு பேர் மீது ஊரடங்கு சட்ட திட்டங்களான தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கடைப்பிடிக்காமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 500 பேருந்துகள் ஏற்பாடு - பிரியங்கா காந்தி!