உத்தரகாண்ட் மாநிலத்தில் கர்வால் இமயமலையில் 21,615 அடி கொண்ட கங்கோத்ரி II சிகரம் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தொழில்நுட்ப சிகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த சிகரத்தில் இந்தோ - திபெத்திய எல்லை காவல் துறையை சேர்ந்த மலையேறுபவர்கள் தொடர்ச்சியாக 8 மணி நேரம் ஏறி சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஐடிபிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐடிபிபி டேராடூன் தலைமையகத்தை சேர்ந்த 9 வீரர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி காலை 8.20 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.
சுமார் 8 மணி நேரம் தொடர்ச்சியாக மலையேறும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். ஐடிபிபியை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள் ராஜேஷ் சந்திர ரமோலா, கான்ஸ்டபிள் பிரதீப் பன்வார், சந்தேந்தர், ஹரேந்தர் சிங், அசோக் சிங் ராணா, அருண் பிரசாத், மற்றும் கோவிங் பிரசாத் ஆகியோர்தான் மலையில் உச்சிக்கு சென்ற அசாத்திய துணிச்சல் கொண்ட வீரர்கள்.
இந்த குழு உறுப்பினர்கள் அனைத்துப் பயிற்சியையும் எடுத்துக்கொண்டனர். கரோனா நெருக்கடியிலும் வீரர்கள் அயராது உழைத்து வெற்றி கண்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.