தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

185 மருத்துவச் சீட்டிற்கு ரூ.100 கோடி வசூல் - வருமானவரித் துறை சோதனையில் அம்பலம்

பெங்களூரு: கர்நாடகாவில் 185 மருத்துவச் சீட்டிற்கு 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என வருமானவரித் துறை சோதனையில் தெரியவந்துள்ளது.

By

Published : Oct 12, 2019, 11:36 AM IST

Updated : Oct 12, 2019, 1:35 PM IST

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்

கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தவர் ஜி. பரமேஸ்வர். மருத்துவத் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த புகாரின் அடிப்படையில் ஜி. பரமேஸ்வரின் வீடு, அவருக்குச் சொந்தமான இடங்கள், பரமேஸ்வரின் சகோதரர் மகன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் இரண்டு நாள்களாக சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையில் பரமேஸ்வருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து நான்கு கோடி ரூபாய் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் ஜி. பரமேஸ்வர், முன்னாள் எம்.பி. ஆர்.எல். ஜலப்பா ஆகியோருக்கு தொடர்புடைய 300 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டதால், இந்தச் சோதனை கர்நாடகாவையே திரும்பிப் பார்க்கவைத்தது.

ஜி.பரமேஸ்வர்

இந்நிலையில், இரண்டு நாள்கள் நடந்த சோதனை குறித்து வருமானவரித் துறை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், ''அக்டோபர் 9ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் மருத்துவ ஆலோசனைக் குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மெரீட் இடங்கள், நிறுவனத்தின் இடங்களாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு எம்பிபிஎஸ், பிஜி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் இந்தச் சோதனையின்போது சிக்கியுள்ளன. இதற்காக ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கணக்கில் வராத ரூ.4.22 கோடி சிக்கியுள்ளது. இதில் ரூ.89 லட்சம் முக்கிய அறக்கட்டளையின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்

ரியல் எஸ்டேட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் கணக்கில் வராத ரொக்கமாக ரூ.100 கோடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பணம் சுமார் 185 பேரிடமிருந்து ஒரு மருத்துவச் சீட்டிற்கு தலா ரூ.50 லட்சம் முதல் 60 லட்சம் வரை பெற்றுக் கொண்டதாகும். மொத்தத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.8.82 கோடி. விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Oct 12, 2019, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details