அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். சாந்தினிபீ எழுதிய 'கல்வெட்டுகளில் தேவதாசி' என்னும் நூல் வெளியீட்டு விழா டெல்லி சாகித்திய அகாதமி அரங்கில் திங்கள்கிழமை (மார்ச் 2) நடந்தது.
இந்த நூலினை கனிமொழி வெளியிட அதனை டெல்லி காவல் துறை இணை ஆணையர் ஜெகதீசன் கண்ணன், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா காவல் இணை ஆணையர் எஸ். ராஜேஷ், இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை ஆணையர் பி. அருண்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, "தேவதாசி என்ற சொல் அண்மையில்தான் பல மனங்களில் கலவரத்தை ஏற்படுத்தியது. இது புரிதல் இல்லாததால் ஏற்படும் சிக்கல். முக்கியமாகப் பெரியாரைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், சர்ச்சைகளாகவே சில விஷயங்களைப் பார்க்கின்றனர்.
தேவதாசிகள் குறித்து பொதுப்புத்தியில் இருக்கும் தவறான எண்ணத்தைப் போக்கவே இப்புத்தகத்தை சாந்தினிபீ எழுதியுள்ளார். தேவதாசி வாழ்க்கை முறை குறித்து தொடர்ந்து படித்துவருகிறேன். இந்தப் புத்தகத்திலும் நிறைய தகவல்கள் இருக்கின்றன.
முத்துலட்சுமி ரெட்டி, நாகரத்தினம் அம்மாள் உள்ளிட்டவர்கள் குறித்தும் இந்த நூல் ஆசிரியர் பேசுகிறார். இந்த நூலில், அந்தக் காலத்தில் சிவன், விஷ்ணு கோயில்களில் பூஜை செய்பவர்கள் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டது குறித்தும் பேசப்பட்டுள்ளது.