கர்நாடக மாநிலம் கிழக்குப் பெங்களூரில் இன்று மதியம் சுமார் ஒன்றரை மணியளவில் விநோத ஒலி ஒன்று பேரிரைச்சலுடன் வெளியேறியது. இது பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம், கல்யாண் நகர், எம்ஜி.ரோடு, மாரத்தஹல்லி, ஒயிட்பீல்டு, சர்ஜாபூர், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய பல பகுதிகளில் ஒரே சமயத்தில் இந்த ஒலியினை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஒயிட்பீல்டு பகுதி மக்கள் சோதனை நடத்திவந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மைய அலுவலர் ஜெகதீஷ், "கிழக்கு பெங்களூருவில் உணரப்பட்ட ஒலியானது நிலநடுக்கத்தால் ஏற்பட்டது அல்ல. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறிகளும் அப்பகுதிகளில் கண்டறியப்படவில்லை. நில அதிர்வுகளுக்கான எவ்வித அளவீடுகளும் அறியப்படாததால் இது எவ்வகையான சத்தம் என அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.