இஸ்ரோவின் கனவுத்திட்டமான மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்காக சில கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது, இஸ்ரோ.
மனிதர்களைத் தாங்கிய விண்கலங்களை வடிவமைப்பதற்கும் விண்வெளியை ஆராய்வதற்கும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் தொழில் நுட்பமும் அறிவும் தேவை. இது அறிவியல் திறன், பொருளாதாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, மனிதர்களில் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
எனவே, இவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு முன்னேற்றப்பாதையில் பயணிக்க வழிவகுக்கும் வகையில் கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளி உணவு தயாரிக்கும் தொழில்நுட்பம், தெர்மல் பாதுகாப்பு அமைப்பு, லைஃப் சப்போர்ட் எனப்படும் பாதுகாப்பு உடைகள் குறித்த தொழில்நுட்பம், மனித ரோபோட்கள் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்ட 17 பிரிவுகள் குறித்த யோசனைகள், திட்டங்கள் மற்றும் ககன்யான் திட்டம் தொடர்பான வேறு தொழில் நுட்பங்கள் குறித்தும் அதன் தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு இஸ்ரோ கேட்டுக்கொண்டுள்ளது.
சரியான பொருட்செலவிலான இத்திட்டங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ள இஸ்ரோ, இந்தத் திட்டங்களை மேற்பார்வையிட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது அனைத்து நிறுவனங்களின் திட்டங்களையும் கலந்து ஆலோசித்து இறுதித் தேர்வை அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றடைந்த மாணவர்கள்!