நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜுலை 22ஆம் தேதி சந்திரயான்2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்2 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து இறுதிப் பணியான விக்ரம் லேண்டரை தரையிரக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த 5ஆம் தேதி நிலவின் தரைப்பகுதியில் தரையிறங்க 2.1 கி.மீ., தொலைவே இருந்த நிலையில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டு மையத்துடனான தொலைத்தொடர்பை இழந்தது.
விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சியை நேரலையில் காண இந்தியாவே உற்றுநோக்கியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகளின் முயற்சியைப் பாராட்டி அவர்களுக்கு ஊக்கமளித்தார். ஆனாலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடி விக்ரம் லேண்டருக்கு உயிரூட்டும் விதமாக அதன் செயல்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதில் போதிய பலன் கிடைக்கவில்லை. இந்தியாவின் இந்த முயற்சிக்கு பல்வேறு உலக நாடுகளும் பாராட்டு தெரிவித்திருந்தன. விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் விதமாக இஸ்ரோவுடன் இணைந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் பணியாற்றியது. குறிப்பிடத்தகுந்த மெசேஜ் மூலம் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முற்பட்டது. ஆனாலும் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில், இதுவரை தங்கள் மீது நம்பிக்கை வைத்து தங்களுக்கு ஊக்கமளித்துவரும் அனைவருக்கும் இஸ்ரோ நன்றி தெரிவித்திருந்தது. தொடர்ந்து முன்னே சென்று இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமையை ஏற்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டிருந்தது.