கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருவது குறித்து சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநில காவல்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவினர் தங்களது கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவரான துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அனூப் குருவில்லா ஜான், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மத்திய புலனாய்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு கேரளாவிலிருந்து 149 பேர் சென்றுள்ளனர்.
குறிப்பாக கேரகோட், கண்ணூர், வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், கொல்லம், பாலக்காடு, இடுக்கி, மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து பெரும்பாலானோர் சென்றுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் முகாமை அடைந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்கு எதிர்கொள்ளும் துயரங்களை விரிவாகக் கூறிய செய்தி ஒன்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ளது.
அடுத்தக்கட்ட விசாரணையில் அந்நபர் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்தது. இதே போல், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் சேருவதற்காக வீட்டை விட்டு வெளியேறி 32 நபர்கள் வளைகுடா நாடுகளில் காவல் துறையிடம் சிக்கியதில் 6 மாத சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.
கேரளாவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் ஆள்சேர்ப்பு செய்யப்படுபவர்கள் ஆரம்பத்தில் வளைகுடா நாடுகளை அடைவதற்கு ஈராக், சிரியாவுக்கு வழியாக செல்கிறார்கள்.
எவ்வாறாயினும், வளைகுடா நாடுகள் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கேரளாவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆள்சேர்ப்பு 2019 ஆம் ஆண்டு முதல் நடக்கவில்லை என மத்திய புலனாய்வு அமைப்புகளும், ரகசிய புலனாய்வு பிரிவுகளும் தகவல் தெரிவிக்கின்றனர்.