நெருக்கடி காலங்களில் கூட விவசாயிகள் தங்கள் கலப்பை மற்றும் கால்நடைகளை விட்டு விடாமல் இரவும் பகலும் உழைத்து தேசத்தின் முதுகெலும்பாக நிற்பதனால் தான், இக்கட்டான இன்றைய சூழ்நிலைகளில் கூட உணவு பற்றாக்குறை இல்லாமல் நாடு மகிழ்ச்சியாக இருக்கிறது.
கோவிட் தொற்றால் நிகழ்ந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் உதவுவதற்கு ஆத்ம நிர்பார் தொகுப்பை அறிவித்த மத்திய அரசு, முக்கியமாக நாட்டின் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிக்கு உதவி செய்வது என்று வரும்போது அவர்களது நலனுக்கும் வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை செயல்படுத்துகிறது என்பது கொடூரமானது.
இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பத்தாவது விவசாய கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் உள்ள சிறு சிறு விவசாயிகளின் 86.2 விழுக்காடு விவசாயிகள், இரண்டு ஹெக்டேர்களுக்கும் குறைவாகவே வைத்துள்ளனர். 12 கோடி 60 லட்சம் சிறு விவசாயிகளுக்கு சராசரியாக 0.6 ஹெக்டேர் சாகுபடி நிலம் உள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்ற பெயரில் விவசாயிகளை சுரண்டுவது பல காலங்களாக பரவலாக இருந்தாலும், விவசாய சந்தைகளில் தரகர்களின் மோசடி, விவசாயிகளின் நலன்களை தீவிரமாக சுரண்டிக் கொண்டிருக்கிறது. அந்த ஒழுங்கமைக்கப்படாத முறையை ஒழிப்பதற்காக, விவசாயிக்கு தனது பயிரை எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கும், கவர்ச்சிகரமான விலையைப் பெறுவதற்கும் சுதந்திரம் வழங்கும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேசமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வர்த்தகர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான அறுவடைக்கு முந்தைய ஒப்பந்தங்களை உறுதி செய்யும் மற்றொரு மசோதா, வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளித்து விவசாயிகளின் கைகளை கட்டிப்போடுகிறது.
இந்த மசோதாவின் நோக்கம் என்னவென்றால், சந்தையாளர்களுக்கு இடையிலான போட்டி காரணமாக பயிர்களுக்கு சரியான விலை கிடைக்க வழிவகுக்கும் என்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் என்றும் உண்மையான களநிலவரங்களுக்கு மாறாக நம்புகிறது.
உண்மையில், விதைப்பு மற்றும் சாகுபடி நடவடிக்கைகளுக்கு ஏராளமான முதலீடு தேவைப்படும் ஏழை விவசாயி, பருவத்தின் தொடக்கத்தில் உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில், வணிகரின் வலையில் விழுந்து லாபம் கிடைக்காத விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறார். அதன் பின்னர் பயிர் மகசூல் அதிகமாக இருந்தாலும், அவருக்கு அதிலிருந்து எந்த நன்மையும் கிடைக்காது, மேலும் முன்பு ஒப்புக்கொண்ட தொகைக்கு மொத்த மகசூலையும் வணிகரிடம் ஒப்படைக்க நிர்பந்திக்கப்படுவார்.
தேசத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு விசுவாசமாகப் பொறுப்பேற்றுள்ள விவசாயிகளின் நலனை உறுதி செய்ய வேண்டிய அரசாங்கம், அந்த உணவு உற்பத்தி செய்பவரை சந்தை சக்திகளின் கைகளில் விட்டுவிடுவது ஆச்சரியமளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பயிர்களுக்கான ஆதரவு விலையை விவசாயிக்கு உதவுவது போல் நிர்ணயிக்கும் அரசாங்கம், உண்மையில் அவருக்கு ஆண்டுக்கு ரூ.2.65 லட்சம் கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்துகிறது என்று வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி நடத்திய ஆய்வு கூறுகிறது.
2000-17 காலகட்டத்தில் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மறைமுக வரிகளின் அளவு ரூ 45 லட்சம் கோடியாக இருந்தது என்ற உண்மையை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
தடையற்ற சந்தைகளை அணுகுவதற்கான விவசாய சந்தைச் சட்டத்தை கொண்டுவர நினைக்கும் மத்திய அரசுக்கு, ஒழுங்குமுறை சந்தைகளிலேயே வாய் திறக்க முடியாத ஒரு விவசாயி எவ்வாறு தடையற்ற சந்தையில் வெற்றிபெற முடியும் என்பது பற்றி எதுவும் தெரியாது.
பயனளிக்காத ஆதரவு விலை விவசாயிகளின் நலனுக்கு ஒரு சுமையாக மாறியுள்ளது என்ற உண்மையைப் பார்க்கும்போது, மேம்பாடுகளை அவ்வப்போது செய்ய வேண்டும் என்ற டாக்டர் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை? என்ற கேள்வி எழுகிறது.
தான் பசியால் வாடினாலும் நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயி, நாடு உணவு தன்னிறைவை அடைவதற்கு மட்டுமல்லாமல், எதற்கும் சமரசம் செய்யாமல் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரு சிப்பாயாக இருக்கிறார். தெலங்கானாவின் பயிர் காலனி முறையை நாடு தழுவிய அளவில் பின்பற்றுவதற்கும், விவசாயிகளை மையமாகக் கொண்ட ஒரு விரிவான விவசாயக் கொள்கையை வகுப்பதற்குமான அவசர தேவை தற்போது உள்ளது.
வருடாந்திர பயிர் திட்டத்தில் உள்நாட்டு தேவைகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, எந்த பயிர்கள் எந்த மண்ணுக்கு ஏற்றது என்பதை அடையாளம் காண்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தி, நாட்டின் 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு காலநிலை மண்டலங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறைந்த விளைச்சல், குறைந்த தரம், பூச்சிகள் தொல்லை, வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகளிலிருந்து விவசாயியைப் பாதுகாக்க விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொள்வது அரசாங்கங்களின் கடமையாகும். பயிர் கொள்முதல் செய்வதை மத்திய அரசு கையகப்படுத்தி விவசாயிக்கு முறையான வருமானத்தை உத்தரவாதம் செய்வதோடு நாட்டின் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். உதவியற்ற விவசாயி பிரச்சினைகளின் சுழலில் சிக்கி, தடையற்ற சந்தையின் கைகளில் விடப்பட்டால், அவர்களது நிலைமை சட்டியிலிருந்து நெருப்பில் விழுவது போலாகி சீர்திருத்தங்களும் சட்டங்களும் வரமாக இல்லாமல் சாபமாகி விடும்.