தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - ஜி.ஹெச்.எம்.சி. தேர்தல்

ஹைதராபாத்: பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி (ஜி.ஹெச்.எம்.சி.) தேர்தலில் வெற்றிபெறுவதற்காக மக்களிடையே வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெலங்கானா நகராட்சி நிர்வாக மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கே.டி. ராமராவ் கூறியுள்ளார்.

மக்களிடையே வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் - கே.டி.ராமராவ் எச்சரிக்கை!
மக்களிடையே வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் - கே.டி.ராமராவ் எச்சரிக்கை!

By

Published : Nov 25, 2020, 5:14 PM IST

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியில் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.), பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே களம் காண்கின்றன. 150 வார்டுகள் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் தற்போது பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தெலங்கானா மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான பண்டி சஞ்சய் குமார் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

இந்நிலையில் நேற்று பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், “மாநகராட்சித் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், பழைய நகரமான ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக வாழ்ந்துவரும் பாகிஸ்தானியர்கள், ரோகிங்கியாக்கள், ஆப்கானிஸ்தானியர்கள் மீது துல்லிய (சர்ஜிக்கல்) தாக்குதல் நடத்தப்படும்.

தெலங்கானா மாநகராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியும், ஓவைசியும் கூட்டுவைத்துள்ளனர். சட்டவிரோத ரோகிங்கியாக்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தானிகளுடன் கைக்கோத்துக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

அந்த வகையில், இன்று இதற்குப் பதிலளிக்கும்வகையில் ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கே.டி. ராமராவ், “பழமையான நகரமான ஹைதராபாத்தின் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படும் என பாஜக தலைவர் கூறியுள்ளார். நீங்கள் யாரின் மீது துல்லிய தாக்குதல் நடத்த உள்ளீர்கள்?

இங்கு வசிப்பவர்கள் இந்திய குடிமகன்கள். ஹைதராபாத் நகரம் என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா? நீங்கள் சுயநினைவோடுதான் இருக்கிறீர்களா, வறுமை, வேலையின்மை நாட்டின் நிலையாகிவிட்டதே அதன் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படுமா?

பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறதே, அத்தகைய கொடுமைகளைச் செய்யும் குற்றவாளிகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்படுமா, ஹைதராபாத்தில் அப்படி என்ன நடந்துவிட்டது, நீங்கள் துல்லிய தாக்குதல் நடத்த விரும்புகிறீர்கள், இங்குள்ள மக்கள் ஒன்றாக வாழ்ந்துவருவதால் இந்தத் துல்லிய தாக்குதல் நடத்த திட்டமிடுகிறீர்களா, தேர்தலில் வெற்றிபெற ஹைதராபாத்தில் வன்முறையை ஏற்படுத்த விரும்புகிறீர்களா?

பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவருகிறார்கள். மதவாத கருத்துகளைக் கூறி வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டி வாக்குகளைப் பெற முயல்பவர்களை மக்கள் நன்கு அறிந்துவைத்துள்ளனர்” எனக் கூறினார்.

மக்களிடையே வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் - கே.டி. ராமராவ் எச்சரிக்கை

பெண் வேட்பாளர்களுக்கு மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ள பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி (ஜி.ஹெச்.எம்.சி.) தேர்தலில் கோவிட் -19 நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மாற்றாக வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுடன் நடத்தப்பட உள்ளதாக தெலங்கானா மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க :'இது ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் அல்ல'- தேஜஸ்வி சூர்யா

ABOUT THE AUTHOR

...view details