இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ஆம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பலத் தரப்பினர் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அதில்,
- நீங்கள் இந்தியாவில் நாடுகளைப் பிரிப்பதற்கான நடுநிலைப் பகுதிகளை உருவாக்குகிறீர்களா?
- இந்தியப் படைகளை 2.4 கி.மீ பின்வாங்க வைத்தீர்களா?
- பிபி -14 இந்திய பிரதேசமாக இருப்பதால் நீங்கள் சமரசம் செய்கிறீர்களா?
- கல்வான் பள்ளத்தாக்கு மீதான இந்தியர்களின் கூற்றை நீர்த்துப்போக செய்கிறீர்களா
எனக்கேட்ட அவர், இந்தியா இதற்கான பதில்களைக் கோருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். வீரர்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, கட்டுப்பாட்டு பகுதியின் இருபுறமும் குறைந்தது 1.5 கி.மீ தூரத்திற்கு நாடுகளைப் பிரிப்பதற்கான நடுநிலைப் பகுதி உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால், கிடைத்த தகவல்களின்படி, கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுப் பகுதியில் பனி உருகி, ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, சீனத் துருப்புகள் விரைந்து நமது எல்லைப் பகுதியிலிருந்து வெளியானதாக தெரிகிறது.