டெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக வட கிழக்கு டெல்லியின் பாஜக மக்களவை உறுப்பினர் மனோஜ் திவாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அப்பதிவை நீக்கியுள்ளார்.
கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவின் முதல் கட்ட அறிகுறிகள் தென்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன்.
இதையடுத்து, கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் உடல்நலத்துடன் உள்ளேன். மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தனிப்படுத்திக் கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் 21.1 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!
இச்சூழலில், அவர் கரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக வட கிழக்கு டெல்லியின் பாஜக மக்களவை உறுப்பினர் மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அப்பதிவை நீக்கியுள்ளார். இதன் காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனாவிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.