தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து, காவல்துறையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஐபிஎஸ் அலுவலராக பணியில் சேர்ந்தவர் அண்ணாமலை. 33 வயதான இவர், கர்நாடக மாநில காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். நேர்மைக்கும், குற்றவாளிகள் மீதான பாய்ச்சலுக்கும் பெயர் போன இவரை கர்நாடக மக்கள் ‘சிங்கம்’ என்று அழைத்து வந்தனர்.
இப்படி நகர்ந்து கொண்டிருந்த அண்ணாமலையின் வாழ்க்கையில் திடீர் திருப்பமாக, தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்புவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது நண்பர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்த காவல் பணியால் எனது வாழ்க்கையில் நான் செல்ல முடியாத நிகழ்ச்சிகள் எண்ணில் அடங்காதவை. கடந்த ஆண்டு நான் சென்ற கைலாஷ் மானசரோவர் பயணமே எனது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மதுக்கர் செட்டியின் மரணமும் என்னை பெருமளவில் பாதித்தது. ஆகையால், இந்த காக்கி உடைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நல்ல தந்தையாக இருக்க ஊருக்கு செல்கிறேன்.
தேர்தலுக்கு முன்பாகவே இதை அறிவித்திருந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால் இந்த முடிவை தாமதமாக அறிவித்துள்ளேன். உடுப்பி, சிக்மங்களூர், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் அழகிய இடங்களை மிகவும் 'மிஸ்' செய்வேன். எனக்கு கீழ் பணியாற்றிய காவலர்கள், சீனியர்கள் என அனைவரது அன்பையும் நிச்சயம் மிஸ் பண்ணுவேன்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்து பிரபலமான ஐபிஎஸ் அலுவலர் ரூபா, அண்ணாமலையின் ராஜினாமா தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அண்ணாமலையுடன் அவரது ராஜினாமா முடிவு தொடர்பாக தாம் பேசியபோது அரசியலுக்கு வருவதாக அவர் தெரிவித்ததார். பாதுகாப்பும் அதிக வருமானமும் கொடுக்கும் ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்வதற்கு ஒரு தனி துணிச்சல் தேவை. அண்ணாமலை போன்ற சாதித்த இளைஞர்கள் அரசியலில் களமிறங்குவதாக முடிவு செய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..!" என்று குறிப்பிட்டுள்ளார்.
நேர்மைக்கும், கண்டிப்புக்கும் பெயர் போனவராக திகழ்ந்துவந்த ‘சிங்கம்’ அண்ணாமலையின் இந்த முடிவுக்கு ரூபா ஐபிஎஸ் வரவேற்பு தெரிவித்திருப்பது சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.