ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தேடிவருகிறது. இந்நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்குமாறு ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை இன்று காலை அணுகினார்.
பின்னர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, அவரது மனுவை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். மேலும், இதனை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனவும் அவர் கூறினார்.
இதையடுத்து, தங்களின் வாதத்தைக் கேட்காமல் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை விசாரணை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் மாயமாகியுள்ள ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அமலாக்கத் துறை, சிபிஐ, சில ஊட்டங்களின் உதவியோடு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. இதுபோன்ற வெட்கப்படத்தக்க அதிகார துஷ்பிரயோகத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பாக பதிவிடப்பட்ட ட்வீட்டில், " உண்மையைப் பேசும் மக்களை தண்டிப்பது அரசின் கோழைத்தனத்தை உணர்த்தியுள்ளது. ப.சிதம்பரம் மிகவும் மதிக்கத்தக்க தலைவராவார். இந்த நாட்டிற்காக அவர் பாடுபட்டிருக்கிறார். அவரது உண்மைக்கான தேடலில் அவருடன் எப்போதும் நாங்கள் துணைநிற்போம்" என கூறப்பட்டுள்ளது.