புதுச்சேரியில் பரவலாகக் காணப்படும் நீர் நிலைகளைக் கண்டறிந்து, அதைப் பாதுகாப்பதற்கு உண்டான பணிகளை புதுச்சேரி மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கவனிக்கப்படாமல் உள்ள நீர் நிலைகளைக் கண்டறிந்து, அதனை பாதுகாக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்வு புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள் கமலக்கண்ணன், ஷாஜகான் கந்தசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் கலந்து கொண்டு அதற்கான செயலியை(app) அறிமுகப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மைய விஞ்ஞானி கிருஷ்ணா கூறுகையில், 'பாதுகாக்கப்படாமல் உள்ள நீர் நிலைகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் போது, இதற்குண்டான தகவல் அவர்களை நேரடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்குச் சென்று விடும். இதன்மூலம் நீர்நிலைகளை மேம்படுத்துதல் மிக எளிதாக இருக்கும்.
நீர்நிலைகளைப் பாதுகாக்க புதுசெயலி அறிமுகம் புதுச்சேரியில் அரசு ஆவணங்கள் மூலம் சுமார் 538 நீர் நிலைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் கொண்டு வந்த இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆய்வு செய்த போது புதுச்சேரியில் சுமார் 700 ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இந்த செயலி நீர் நிலைகளைப் பாதுகாக்க உதவும் என்றார்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் அறுவை சிகிச்சை செய்ய தமிழ்நாடு அரசு உதவும்: முதலமைச்சர்!