தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

”காங்கிரஸ் பிராமணர்களை நோக்கிச் செல்வது அரசியலுக்காக அல்ல” - ஜிதின் பிரசாதா - காங்கிரஸ் பிராமணர் உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து காங்கிரஸ் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவிடம் அமித் அக்னிஹோத்ரி நடத்திய கலந்துரையாடல்.

Congress
Congress

By

Published : Aug 27, 2020, 11:08 PM IST

உத்தரப்பிரதேச பிராமணர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறிய நிலையில், அவர்களை ஒருங்கிணைக்கும் உங்கள் முயற்சிக்கு எத்தகைய பலன் கிடைத்துள்ளது?

நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பிராமிண் சேத்னா பரிஷத் என்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பின் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிராமண சமுதாயத்தினரை நான் சந்தித்து வருகிறேன். பொதுமுடக்கம் அறிவிக்கும் முன்பே உத்தரப்பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் உள்ள பிராமண சமுதாயத்தினரை சந்தித்து முடித்துவிட்டேன். பிராமணர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஒரு எண்ணம் இருக்கிறது. அதோடு, பிராமணர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

இதற்கு அரசுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், பிராமணர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. அரசின் குற்ற ஆவணங்களில் உள்ள பதிவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரியில் நவோதயா வித்யாலயாவில் படித்து வந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்கள். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்தை நான் சந்தித்தேன். இதுகுறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்துக்கு, பிரயங்கா காந்தி வத்ராவும் கடிதம் எழுதினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

இதேபோல், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பஸ்தியில் கபிர் திவாரி என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அவனது குடும்பத்திற்கும் இதுவரை எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை. இதேபோல், ஜான்சி, இடாவா, சுல்தான்பூர் போன்ற நகரங்களிலும் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.

பிராமணர்களை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி உங்களுக்கு எத்தகைய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது?

பிராமணர்களை ஒருங்கிணைக்க வேண்டும்; அவர்களுக்கான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். இதற்காக ஆன்-லைன் சந்திப்புகளையும் நான் நடத்தி வருகிறேன். இதுவரை மாவட்ட அளவில் 30 சந்திப்புகள் நடந்துள்ளன. அடுத்த ஒரு மாதத்தில் மீதமுள்ள மாவட்டங்களிலும் சந்திப்புகள் நடத்தி முடிக்கப்படும். தாங்கள் கைவிடப்பட்டதாக பிராமண சமூகம் கருதுகிறது. நிச்சயம் உங்கள் கவலைகளை மத்திய - மாநில அரசுகள் கேட்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க நான் முயன்று வருகிறேன்.

குற்றவாளிகளின் கூடாரமாக பிராமண சமுதாயம் மாறிவிட்டது என்பது போன்ற உண்மைக்கு மாறான கருத்தியலை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. எனினும், மக்கள் ஆதரவு இல்லாதபோது இதுபோன்ற கருத்துக்கள் 2 மாதங்களுக்குக் கூட நீடிக்காது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் இந்த முயற்சியை மேற்கொள்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக கருத வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உத்தரப்பிரதேசத்தின் பிராமண தலைவராக என்னை முன்னிருத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இருந்த போதிலும் ஒரு அரசியல்வாதி என்பதால், அவ்வாறு கருத வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் இந்த முயற்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதுதான்; ஓட்டுக்கான முயற்சி அல்ல. பிராமிண் சேத்னா பரிஷத் என்ற அமைப்பின் கீழ்தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்றவர்களின் உரிமையை அபகரிக்கும் நோக்கத்துடன் எந்த நிகழ்ச்சிகளையும் நாங்கள் திட்டமிடவில்லை. பிராமணர்களின் உரிமைக்காகவே நாங்கள் போராடுகிறோம். மாநில அரசு பணிகளிலும், உயர் பதவிகளிலும் பெயரளவிற்கே பிராமணர்கள் இருக்கிறார்கள்.

கடந்த 2017 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 10 சதவீதம் உள்ள பிராமணர்களின் வாக்குகளை குறிவைத்தே முதலமைச்சர் வேட்பாளராக ஷீலா தீக்ஷித்தை காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்த 2022 தேர்தலின்போதும், பிராமணர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிருத்துமா?

முதலமைச்சர் வேட்பாளர் என்பது வியூகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு. அப்போது கட்சித் தலைமை என்ன நினைக்கிறதோ அதைப் பொருத்து முடிவு எடுக்கப்படும். கடந்த 2017 தேர்தலின்போது நாங்கள் ஷீலா தீக்ஷித்தை முன்னிருத்தியது உண்மைதான். ஆனால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு, ஷீலா தீக்ஷித் முன்னிருத்தப்படவில்லை.

காங்கிரசின் அந்த முயற்சியால், உத்தரப்பிரதேசத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்களான தலித்துகளும், இஸ்லாமியர்களும் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். அவர்களை மீண்டும் கட்சிக்கு அழைத்து வர ஏதும் திட்டம் இருக்கிறதா?

சட்டம் ஒழுங்கு, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு போன்றவை இல்லாததால் அனைத்து சமுதாய மக்களுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில்தான் நாங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

உத்தரப்பிரதேசத்தில் 2017ல் ஏற்பட்ட காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி படுதோல்வி அடைந்தது. 2022-லும், சமாஜ்வாதி அல்லது ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?

எந்த கூட்டணியும் ஏற்படுத்தப்பட மாட்டாது. தனித்துதான் நாங்கள் தேர்தலை சந்திக்க உள்ளோம். அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. முழு வீச்சில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கட்சி முழுமையாக இதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. மாநில அரசை நாங்கள் தனித்தே எதிர்கொண்டு வருகிறோம். உத்தரப்பிரதேசத்தின் வலிமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ்தான் தெரிகிறது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் விவகாரத்தை பாஜக கையில் எடுத்தால், காங்கிரஸ் என்ன செய்யும்?

ராமர் கோயில் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை பிரியங்கா காந்தி வத்ரா தனது அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார். ராமர் கோயில் கட்டப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். அதுதான் கட்சியின் நிலைப்பாடு.

ABOUT THE AUTHOR

...view details