உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்றுநடைபெறவுள்ள ஸ்ரீராமர் ஜென்ம பூமி கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மிகத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்), லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி) , ஜமாத் உல் முஜாகிதீன், ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தற்கொலை தாக்குதல் நடத்தக்கூடும் என்று புலனாய்வு அமைப்பான ரா கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இருக்கலாம் என ராவின் அறிக்கையின் மூலமாக அறிய முடிகிறது.
இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ சிறப்பு பயிற்சி அளித்துள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த சதித் திட்டத்திற்காக ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்குள் நான்கு பயங்கரவாதிகளை அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் அயோத்தி பூமி பூஜையிலும், வெவ்வேறு குழுக்களிலும் டெல்லி சுதந்திர தினத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, நேற்று முன்தினம் (ஜூலை 26) ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் இருந்த ஓர் ரகசிய இடத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்துகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அயோத்தி உள்ளிட்ட நாட்டின் முக்கியமான கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.