ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று நடந்த பாஜக பேரணியில் உரையாற்றிய பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "மரியாதைக்குரிய (முதலைச்சர்) கெலாட் அவர்களே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதை விட்டொழித்து, கோட்டா மருத்துவமனையில் தினந்தோறும் குழந்தைகள் இறப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள். தாய்மார்கள் உங்களை வஞ்சித்து வருகின்றனர்" என்றார்.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் அமைந்துள்ள ஜேகே லோன் என்ற அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அம்மாநில முதலைச்சர் அசோக் கெலாட் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்திவரும் நிலையில், அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, "மக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க ஆதாரச் சான்றிதழ்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டும் என (மேற்கு வங்க முதலமைச்சர்) மம்தா கூறுகிறார். இந்தியாவில் அடைகலம் தேடி மேற்கு வங்கத்தில் தங்கியிருக்கும் சகோதரர்களே, நீங்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக மாட்டீர்கள். மாறாக, கவுரவமான முறையில் குடியுரிமை வழங்கப்படும். மம்தா அம்மையாரை நினைத்து நீங்கள் அச்சப்பட வேண்டாம்" என்றார்.