உலகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பயணங்கள் முடக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
அந்த வகையில், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் சிக்கித் தவித்துவந்த இந்திய மக்கள் 685 பேர் மீட்கப்பட்டு நேற்று தங்கள் பயணத்தைத் தொடங்கிய நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அவர்கள் அனைவரும் தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தனர்.
128 பெண்கள், 557 ஆண்கள் அடங்கிய 685 பேர், நேற்று இரவு கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். ஜலாஷ்வா மூலம் பயணத்தைத் தொடங்கி, இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என்ற வரிசையிலும், மாவட்ட வாரியாகவும் ஒவ்வொருவராகத் தரையிறக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் தரையிறங்கும் அனைவருக்கும் துறைமுகத்தில் மேலும் ஒரு முறை கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.