இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் பாகிஸ்தான் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவருகிறது. பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் தொடர்ச்சியான அழுத்தம் அளித்துவருகின்றன. குறிப்பாக பொருளாதாரத் தடை விதிக்கும்விதமாக FATF அமைப்பு பாகிஸ்தானை கிரே பட்டியல் நாடுகளில் வைத்துவருகிறது.
இந்தச் சூழலில், இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் செயல்பாட்டில் பாகிஸ்தான் மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியான கிஷென் கங்கா நதிப்படுகையில் பயங்கரவாத நடமாட்டத்திற்கான அறிகுறிகள் தென்படுவதாக இந்திய ராணுவத்தினருக்குத் துப்பு கிடைத்தது.
இதையடுத்து, அம்மாநில காவல் துறையினருடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது 3 பயங்கரவாதிகள் இரு பைகளில் பயங்கர ஆயுதங்களுடன் நதியை கடந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.