கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதிமுதல் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
பின்னர் பொது முடக்கத்தில் மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகளையடுத்து, குறைவான எண்ணிக்கையில் தற்போது உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
இதனால், விமான நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருவாய் இழந்துள்ளதால், ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையிலும், பணியாளர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு அளிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், பிரபல தனியார் விமான நிலையமான இண்டிகோ நிறுவனம் மீண்டும் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி குறைக்கப்படும் ஊதியங்களுக்கு ஏற்ப செலவுக் கட்டமைப்பை சரிசெய்ய தொடர்ச்சியான முயற்சிகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் உள் தகவல்தொடர்பு அலுவலரின் தகவலின்படி, தலைமை நிர்வாக அலுவலருக்கு 35 விழுக்காடு ஊதியக் குறைப்பும், மூத்த துணைத் தலைவர்களுக்கு 30 விழுக்காடு ஊதியக் குறைப்பும் செய்யப்பட்டுள்ளது. மேலும், விமானிகளின் ஊதியக் குறைப்பு 28 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊதியக் குறைப்பு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலில் இருக்கும், மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் மே அறிவிப்பின்படி இருக்கும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: இண்டிகோ நிறுவனத்தில் 10 விழுக்காடு ஆள்குறைப்பு!