சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இதன் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துவருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 537 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளது. இதில் 71 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் குணமடைந்ததன் மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த 12 மணிநேரத்தில் நாடு முழுவதும் இந்த நோய் தொற்றால் 30 பேர் உயிரிழந்ததன் மூலம், அதன் எண்ணிக்கை 169-ல் இருந்து 199ஆக அதிகரித்துள்ளது.