தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: ஐ.டி. துறையில் பிடிப்பை தக்கவைக்க இந்தியா செய்யவேண்டியது என்ன? - India provides world’s digital services

இந்தியாவின் வளர்ச்சியை அளவிடும் புள்ளியாக இதுநாள்வரை பங்கு வகித்துவந்திருக்கிறது தகவல் தொழில்நுட்பத் துறை. உலகளவில் கோவிட்-19 பரவல் காரணமாக எழுந்த அசாதாரணமான சூழல், இந்தியாவின் அத்துறையின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

INDIAS IT SECTOR GRAPPLES WITH CORONA CRISIS
கரோனா அச்சுறுத்தல்: ஐ.டி துறையில் பிடிப்பை தக்க வைக்க இந்தியா செய்யவேண்டியது என்ன?

By

Published : May 21, 2020, 1:31 PM IST

சர்வதேச அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் இந்தியாவில் உயிரிழப்புகளோடு, பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்திவருகிறது.

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எட்டு வார ஊரடங்கு, பல்வேறு துறைகளைப் பாதித்திருந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, குறுகிய காலத்தில் அதிவேகமான செயல்பாடுகள் மூலமாக நிகழ்த்திக்காட்டிய தகவல் தொழில்நுட்பத் துறை இன்று தடைப்பட்டுள்ளதால் அதனையொட்டிய அனைத்துச் சேவைகளும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் ஏறத்தாழ 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாக அறிய முடிகிறது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னெப்போதுமில்லாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு, பொருளாதார மந்தநிலையுடன் போராடி அண்மைக் காலமாக முன்னேற்றத்தைக் கண்டுவந்த இந்தத் தொழில் துறைக்கு கரோனா தாக்குதல் தலை மேல் இடியாக விழுந்துள்ளது.

அறிவுசார்ந்த தொழிலான தகவல் தொழில்நுட்பம், மனித வாழ்க்கையில் பெரிய மாற்றங்களுக்கு பங்களித்தது. ஒழுங்கமைக்கப்பட்ட, விரைவான, எளிதான, வெளிப்படையான, வளமான வளர்ச்சியை வழங்கிய இந்தத் துறை தற்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இது நவீன நிர்வாகத்திற்கும், டிஜிட்டல் (எண்ம) உலகிற்கும் பெரும் பாதையை வகுத்துத் தந்தது.

ஏறக்குறைய 50 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தில் தனக்கான நிலையான இடத்தை இந்தியா தக்கவைத்துள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 7.7 விழுக்காட்டை ஈட்டுத்தந்த தகவல் தொழில்நுட்பம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஆசிய நாடுகளில் மட்டுமல்ல உலகளவில் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் பொறாமைமிக்க வளர்ச்சிப் பாதையை முன்வைத்த இந்தியாவுக்கு, முதுகெலும்பாக தகவல் தொழில்நுட்பம் திகழ்ந்தது.

உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் சேவைகளில் 55 விழுக்காடு சந்தைப் பங்கை இந்தியா வைத்திருக்கிறது. உலகளவில் ஏறத்தாழ 120 நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.

உலகின் டிஜிட்டல் (எண்ம) சேவைகளில் 75 விழுக்காடு இந்தியா வழங்கிவருகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், அதன் வழியாக இயக்கப்படும் சேவைத் துறையின் அளவு 2018-2019ஆம் நிதியாண்டில் 181 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதி மதிப்பில் அடங்கும்.

2000ஆம் ஆண்டுகளில் சர்வதேச அளவில் படிப்படியாக விரிவடைந்த இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கத் தொடங்கியது. 2000-2019ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், 43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வன்பொருள், மென்பொருள் ஆகிய இரு துறைகளிலும் வெளிநாட்டு முதலீடுகளைக் குவித்தது.

நாட்டின் வேலைவாய்ப்பு விகிதத்தை இந்தத் துறையின் வருகை மேம்படுத்தியது, அந்த வளர்ச்சியோடு மேலும் தொழிற்துறை கிளை துறைகளும் விரிவடையத் தொடங்கின. வெளிநாடுகளில் கூடுதலாக 20 லட்சம் பேரும், உள்நாட்டளவில் 46 லட்சம் பேரும் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையினால் நேரடியாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

கடந்த இருபது ஆண்டுகளாக வேலைவாய்ப்பு வழங்கும் முன்னுரிமை பட்டியலில் தகவல் தொழில்நுட்பத் துறை முதலிடத்தில் உள்ளது. தொழில் முன்னேற்ற வாய்ப்புகள், கவர்ச்சிகரமான சலுகைகள் காரணமாக பெரும்பாலான மக்கள் தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்ற விரும்புகிறார்கள்.

நாட்டின் வளர்ச்சியில் வானளாவிய இடத்தை தக்கவைத்திருந்த தகவல் தொழில்நுட்பத் தொழில் துறை, தற்போது அதன் எதிர்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நிதி நெருக்கடிகள், செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ரோபாட்டிக்ஸ் (இயந்திரப் படிவம்), தகவல் பகுப்பாய்வு என அனைத்தும் தகவல் தொழில்நுட்பத்தின் வீழ்ச்சியில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.

குறிப்பாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் இந்தத் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் முக்கிய முடிவுகளை அவர் எடுத்தார்.

அமெரிக்காவில் நிலவிய மந்தநிலையை சாக்காக வைத்து, தகவல் தொழில்நுட்ப வளாக வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் திட்டமிடத் தொடங்கியது அவரது அரசு.

ஏற்கனவே முன்னெடுத்துவந்த இந்த நடவடிக்கைகளால் கவலைக்கிடமாக இருந்த தகவல் தொழிற்நுட்பத் துறையின் மீது மேலும் ஒரு மரண அடியாக வந்து விழுந்தது கோவிட்-19 நெருக்கடி. கரோனா பெருந்தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் ஒரே வழியாக பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியதால், உலகளவில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள் முடங்கின.

கரோனா நெருக்கடிக்கு இந்தியாவில் மட்டும் இதுவரை 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளன. வல்லுநர்களும்கூட தற்போது வேலை இழப்புக்கு அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது.

வருவாய் வீழ்ச்சியடைந்த நிலையில், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன. சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை அறிவித்துள்ளன.

பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைசெய்ய ஊக்குவித்துள்ளன. புதிய வேலைத் திட்டங்கள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சேவையானது, 75 விழுக்காடு ஐரோப்பா, அமெரிக்க சந்தைகளை நம்பியே உள்ள நிலையில், இந்த நாடுகள் கோவிட்-19 அச்சுறுத்தல் விளைவாக முடங்கியுள்ளன. உடனடியான, மீட்சிக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் இந்தத் துறை இன்னும் மோசமான நிலையை அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆள்சேர்ப்புக்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை. வாடிக்கையாளர்கள் வரவிருக்கும் திட்டங்களை ரத்துசெய்யலாம் அல்லது காலவரையின்றி ஒத்திவைக்கலாம் என்ற கவலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் துறையில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா முன்னணியில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதைக் கவனிப்போருக்கு இந்த இரு மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் அதில் அதிக நாட்டம் கொண்டிருப்பதை அறிய முடியலாம்.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு லட்சம் பேர் நேரடியாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பதவிகளிலும் இவர்களே உள்ளனர். தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டின் தலைமை நிர்வாக அலுவலராக சத்யா நாதெள்ளா உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இரு மாநிலங்களின் அரசுகளும் டிஜிட்டல் (எண்ம) சேவைகள், மின் நிர்வாகத்தை ஆதரிக்கின்றன. உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், ஐ.பி.எம்., ஆரக்கிள், அமேசான் ஆகியவை ஹைதராபாத்தில் தங்களது முக்கிய வளாகங்களைக் கொண்டு இயங்கிவருகின்றன.

விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக முன்னேறிவருகிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அந்த வேகமான முன்னேற்றம் என்பது பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களை மனித வளமாகக் கொண்டிருக்கின்ற நமது நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்யும் என்பதையும் ஆளும் அரசு உற்று கவனிக்க வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறையின் சுமையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன் முயற்சி எடுக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அடங்கிய சிறப்புப் பணிக்குழு இதற்காக நியமிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு துறைக்கும் நிலைத்தன்மை மிக முக்கியமானது என்பதால், நிறுவனங்களைத் தக்கவைக்க அரசு உறுதிசெய்ய வேண்டும். உள்நாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கேமிங், அனிமேஷன், மின்னணு உற்பத்தி, கிராமப்புற தொழில்நுட்பம் போன்ற புதுமையான களங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பெருந்தொற்றுநோயின் தாக்கம் முடியும்போது, பல நாடுகள் தங்களது அமைவிடத் தளத்தை சீனாவிலிருந்து மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம். அப்போது, ஆசியாவின் வளரும் நாடான இந்தியா இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு தற்போதுள்ள தனது கொள்கைகளை மறுஆய்வு செய்து, சீர்த்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு உறுதியளிக்க வேண்டும். நெருக்கடியால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ள அதன் கிளைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்.

இதையும் படிங்க :உலகமே பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னர்கள்!

ABOUT THE AUTHOR

...view details