ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே நாளில் 18 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐஏஎஸ் அலுவலரான ராஜேஷ் சிங்கும் ஒருவர். இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்ட ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்னா சிவில் நீதிமன்ற நிர்வாக அலுவலரான ரவீந்திர குமார் சிங்கின் மகனான ராஜேஷ் இதற்கு முன்னர், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறையில் சிறப்பு செயலாளராக பணியாற்றிவந்தார்.
தனது ஆறு வயதில் பார்வை இழந்த ராஜேஷ், பார்வை குறைபாடு தனது லட்சியத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவரது விடாமுயற்சியின் பலனாக 2007ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், நீண்ட சட்டப்போர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு ஐ.ஏ.எஸ் பொறுப்புக்கு தேர்வானார். அதன்பின் அதே ஆண்டு அசாம்-மேகாலயா கேடர் ஐ.ஏ.எஸ் அலுவலராக பணியில் சேர்ந்தார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முடித்த ராஜேஷ், ஐ.ஏ.எஸ்ஆக 'ஒருவருக்கு குறிக்கோள் தேவை, கண்பார்வை அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜேஷ் சமூகத்தில் மாறுபட்ட திறன் கொண்ட மக்கள் எதிர்கொள்ளும் விரோதப் போக்கு குறித்து ஒரு கற்பனை நாவலை எழுதியது மட்டுமல்லாமல், பார்வையற்ற கிரிக்கெட் உலகக் கோப்பையில் மூன்று முறை இந்திய அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.