கரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க RT-PCR, ரேபிட் டெஸ்ட், ஆன்ட்டிபாடி டெஸ்ட் என பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் RT-PCR போல் துல்லியமான முடிவுகள் மற்ற பரிசோதனைகளில் கிடைப்பதில்லை.
இருப்பினும், RT-PCR பரிசோதனையில் முடிவுகள் கிடைக்க நேரமாகும் என்பதாலும் அதிக செலவாகும் என்பதாலும் நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த முறையை பயன்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.
RT-PCR சோதனைகள் தரும் அதே துல்லியத்துடன் விரைவாக முடிவுகளை அளிக்கும் ஒரு பரிசோதனை முறையை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முயன்றுவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள CRISPR கோவிட்-19 பரிசோதனை முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
டாடா குழுமமும் டெல்லியுள்ள CSIR-IGIB நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த முறையில், கரோனா வைரசின் மேற்புறத்தில் இருக்கும் Cas9 protein என்பதை கண்டறிவதன் மூலம் ஒருவர் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளரா என்பதை கண்டறியலாம். இருப்பினும், இந்த சோதனை RT-PCR சோதனையைவிட விரைவாகவும் குறைந்த செலவிலும் மேற்கொள்ள முடியும்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வரும் காலங்களில் மற்ற வைரஸ்களை கண்டறியவும் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் டாடா குழுமம் அறிவித்துள்ளது.
இந்த கருவிகள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நாடு முழுவதும் இந்த முறை பயன்படுத்தப்படும் என்றும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போதுவரை 54 லட்சத்து 619 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 86,774 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா காரணமாக முன்கூட்டியே முடியும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?