ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி "மக்கள் கூட்டணிக்கான குப்கர் பிரகடனம்" என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். இதற்கிடையே, மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்கள் கூட்டணிக்கான குப்கர் பிரகடனம் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தது.
இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேச நலனுக்கு எதிரான தூய்மையற்ற கூட்டணியை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாட்டவர் தலையிடவே மக்கள் கூட்டணிக்கான குப்கர் பிரகடனம் விரும்புகிறது. மூவர்ணக் கொடியை அவமதிக்கும் விதமாக அவர்கள் செயல்படுகின்றனர்.
குப்கர் கும்பலின் செயல்பாடுகளை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆதரிக்கிறார்களா? என்பதை சொல்ல வேண்டும். நாட்டு மக்களுக்கு இந்த விவகாரத்தில் அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்த காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லவே காங்கிரஸ், குப்கர் கும்பல் விரும்புகிறது. அரசியலமைப்புச் சட்டம் 370ஐ நீக்கி தலித்கள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் உரிமைகளை நிலைநாட்டினோம். அதனைப் பறிக்க அவர்கள் முயல்கின்றனர். எனவேதான், மக்கள் அவர்களை நிராகரிக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. அது அப்படியேதான் தொடரும். ஒன்று அவர்கள் தேசத்திற்கு ஆதரவான அலையில் செல்ல வேண்டும். இல்லையெனில் அவர்கள் அதில் மூழ்கிவிடுவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
நவம்பர் 28ஆம் தேதி தொடங்கும் மாவட்ட கவுன்சில்களுக்கான தேர்தல், டிசம்பர் 19ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் டிசம்பர் 22ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.