இந்தியா-சீனா எல்லைப்பகுதிகளான அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம், லடாக் ஆகியவை லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் அல்லது எல்லைக்கோட்டுப்பகுதி என அழைக்கப்படுகிறது. இந்த எல்லைப் பகுதிகளில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே அவ்வப்போது சிறு, சிறு மோதல்கள் நடப்பது சகஜம்தான்.
இந்நிலையில், லடாக்கில் கிழக்குப் பகுதியில் இம்மாத தொடக்கத்தில், சீன படையினரால் இரண்டு முறை இதுபோன்ற மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதையடுத்து, இருநாடுகளும் தங்களது பாதுகாப்புப் படையினரை லடாக்கில் குவித்துள்ளதால், அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, இந்தியா-சீன இடையேயான இந்தப் பூசல் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் நேற்று (மே.27) விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, 'சீனாவுடனான பிரச்னையை இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், அமைதியான முறையில் தீர்த்து' வருவதாகக் கூறி அமெரிக்க அதிபரின் முன்னெடுப்பைச் சூசகமாக நிராகரித்தார்.
ஆனால், இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அரசு இந்தியாவை அணுகியதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் இருக்கேன்; இந்தியா - சீனா மத்தியஸ்தத்திற்கு முன்வந்த ட்ரம்ப்