கிரிகிஸ்தான் நாட்டில் மருத்துவம் பயின்றுவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் பலர் இந்தியா திரும்புவதற்கான நடைமுறைகளை எளிமையாக்குமாறு பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய தூதரகம் ஆகியோரிடம் காணொலி மூலம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
'உயிருடன் இருக்கும்போதே எங்களைக் காப்பாற்றுங்கள்' - கிரிகிஸ்தானில் தவிக்கும் இந்திய மாணவர்கள் - இந்தியா திரும்புவதற்கான நடைமுறைகளை எளிமையாக்குமாறு கோரிக்கை
லக்னோ: கிரிகிஸ்தானில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள் தாங்கள் நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணொலியில் பேசிய அவர்கள், ”கிர்கிஸ்தானில் மருத்துவம் பயின்றுவரும் பல இந்திய மாணவர்கள், பயணக் கட்டுப்பாடு காரணமாக மத்திய ஆசியாவில் சிக்கித்தவித்துவருகிறோம். இங்கு மிக தீவிரமாக கரோனா பரவிவருகிறது. நிலைமை மோசமாகுவதற்கு முன்பே, நாங்கள் நாடு திரும்ப உதவுங்கள். இங்கு எங்களுக்குச் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. உயிருடன் இருக்கும்போதே எங்களைக் காப்பாற்றுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கிரிகிஸ்தானில் மருத்துவம் பயின்றுவந்த உத்தரப் பிரதேசத்தின் படோஹி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் குமார் குப்தா என்ற மாணவர் மூளை ரத்தக்கசிவு, நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.