சீனாவில் கரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற சீனா அரசிடம் இந்திய வெளியுறவுத் துறை அனுமதி கோரியது.
இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் தனி விமானங்கள் மூலம் நாடு திரும்பினர். அவர்களுக்கென்று இந்திய ராணுவம், ஹரியானாவுக்கு அருகே உள்ள மானேசரில் தனி முகாமை ஏற்படுத்தியுள்ளது.
300 படுக்கை வசதிகளுடன் இந்த முகாமில் அவர்களுக்கு விரிவான பரிசோதனைகள் நடத்தப்படும். இந்த முகாமில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தங்கும் அவர்களில் யாருக்காவது வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்படுவர்.