டெல்லியில் நடைபெற்ற 32ஆவது காமன்வெல்த் மாநாட்டின், சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி மூலம் உரையாற்றிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது, கோவிட்-19 தொற்றை சமாளிக்க மருத்துவ உபகரணங்கள், மருந்து தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் ஆகியவை உலகளவில் அனைத்து தரப்பினருக்கும் சமமான முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஒற்றுமையின் அடையாளமாக, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற அத்தியாவசிய மருந்துகளை ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்த்து உலகளாவிய அளவில் ஒருங்கிணைந்து போராட இந்தியாவே முதலில் வலியுறுத்தியது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் நுழைவு வாயில் கண்காணிப்பு, பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுத்தல், சுகாதார உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல், சுகாதார ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட அனைத்து விதமான அத்தியாவசிய நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் இந்தியா துரிதமாக மேற்கொண்டது.
இந்த தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கை அமல்படுத்தியதைப் பற்றி கூறிய அமைச்சர், “கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கால் மட்டுமே சாத்தியம். பொதுமக்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை துண்டித்ததால் வைரஸின் பரவலை அதிகளவில் கட்டுப்படுத்த முடிந்தது. மத்திய அரசு, மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதில் கவனமாக செயல்பட்டது" எனக் கூறினார்.
இதையும் பார்க்க: ‘பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்’