சமீபத்தில் வருகைதந்த அமெரிக்க அதிபர் அளித்த புகழாரத்துக்குப் பின் இந்தியர்கள் பெருமித உணர்வுடன் இருப்பது சரியே. ஆனால், நாம் மெத்தனப்போக்கால் மேலோங்கி சென்றுவிடக்கூடாது. நாம் எங்கு திரும்பினாலும் அபிலாஷைகளுக்கும், எதார்த்தத்திற்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. ஆனால், நம்முடைய பள்ளிக்கூடங்கள் பக்கம் நம் கவனத்தைத் திருப்பும்போது மிகவும் சோகமான இடைவெளி இருக்கிறது. நாம் 70 ஆண்டுகளாக நம்முடைய குழந்தைகள் சுதந்திரமான சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும், புதுமையான இந்தியர்களாக வளரவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், நம்முடைய கல்வி முறையானது அவர்களை வீழ்த்தவும், அவர்களை அதிகாரமற்றவர்களாக ஆக்கவும் சாத்தியமான எல்லாவற்றையும் செய்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு கண்ணியமான பள்ளியில் சேர்ப்பதற்கு வருடாவருடம் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்கும் காட்சியானது மனமுடைய செய்வதாயிருக்கிறது. நல்ல பள்ளிகளில் போதுமான இடம் இல்லாத நிலையில் அநேக பெற்றோர்கள் தோல்வியால் துவண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் வருடாந்திர நிலை கல்வி அறிக்கையானது (ASER) ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே ஒரு பத்தியினை வாசிக்கவும், அல்லது இரண்டாம் வகுப்பு கணிதத்தினை மட்டுமே செய்யவும் முடிகிறது என்ற சோகமான செய்தியினைக் கொண்டுவருகிறது. சில மாநிலங்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான ஆசிரியர்கள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் (TETs) தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்திரப் பிரதேசத்திலும், பீஹாரிலும் நான்கில் மூன்று ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்பு கணித பாடத்தின் சதவிகித கணக்கினைக்கூட செய்யமுடியாதிருக்கிறார்கள். வாசித்தல், விஞ்ஞானம் மற்றும் கணிதம் பாடங்களின் சர்வதேச (PISA) தேர்வில் 74 நாடுகளில் 73வது இடத்தில் (கிர்கிஸ்தானுக்கு மேல்) இந்தியக் குழந்தைகள் இருப்பது அதிசயமானதொன்றல்ல. நல்ல அரசுப் பள்ளிகள் பற்றாக்குறையாக உள்ளதால், குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அரசின் DISE தகவலின்படி, 2011 மற்றும் 2015க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது 1.1 கோடி குறைந்தும், தனியார் பள்ளிகளில் 1.6 கோடி உயர்ந்தும் உள்ளது. இந்த நிலையின் அடிப்படையில், 2020ல், 130,000 கூடுதல் தனியார் பள்ளிகள் தேவை. ஆனால், அவைகள் திறக்கப்படவில்லை. ஏன்? அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்று என்னவென்றால், ஒரு நேர்மையான நபரால் பள்ளிக்கூடம் தொடங்குவதென்பது பெரும் கஷ்டமாகும். மாநிலத்தைப் பொறுத்து 30 முதல் 45 அனுமதிகள் தேவைப்படுவதோடுமட்டுமன்றி, பெரும்பாலும் அங்குமிங்கும் அலைச்சலும், லஞ்சமும் தேவைப்படுகிறது. விலையுயர்ந்த லஞ்சங்கள் எதுவென்றால், பள்ளித் தேவை நிரூபனச் சான்றிதழ் மற்றும், பள்ளி வாரிய அங்கீகாரச் சான்றிதழ் பெறுவதற்குக் கொடுக்கும் லஞ்சங்களே ஆகும்.
பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம் கட்டணக் கட்டுப்பாடு ஆகும். கல்வி உரிமைச் சட்டத்தில் தான் சிக்கலே ஆரம்பமானது. அரசுப் பள்ளிகள் தோல்வியடைந்துகொண்டிருப்பதை அரசாங்கம் உணர்ந்து தனியார் பள்ளிகள் ஏழைகளுக்காக 25 சதவிகித இடங்களை ஒதுக்கவேண்டும் என்று கட்டளையிட்டது. இது ஒரு நல்ல ஆலோசனையாக இருந்தாலும் மோசமாக நிறைவேற்றப்பட்டது. மாநில அரசுகள், ஒதுக்கப்பட்ட மாணவருக்குப் போதுமான அளவு தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்காததால் 75 சதவிகிதம் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது. இது பெற்றோர்களிடமிருந்து ஆரவாரத்தை உண்டாக்கியது. பல மாநிலங்கள் கட்டணங்கள் மீது கட்டுப்பாட்டினை விதித்தன. இது படிப்படியாக பள்ளிகளின் நிதிநலத்தினை வலுவிழக்கச் செய்துவிட்டது. பிழைத்திருக்கவேண்டி பள்ளிகள் சிக்கனத்தை கையாண்டபடியால் தரமானது சரிவைநோக்கிச் சென்றது. சில பள்ளிகள் உண்மையில் மூடப்பட்டுவிட்டன.
பள்ளி தன்னாட்சி மீதான சமீபத்திய தாக்குதல் என்னவென்றால், தனியார் பாடபுத்தக்தின் மீதான தடையே ஆகும். 2015ல் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையானது, அரசு வெளியிட்ட NCERT புத்தகங்களை மட்டுமே பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. சிபிஎஸ்இ பள்ளிகளில் தடை அமலாகும்போது புத்தகங்களின் விலை குறையக்கூடும் என்றாலும், அவைகளுடய தரத்தின் வீழ்ச்சி மற்றும் அந்தப் புத்தகங்கள் தாமாதாக வந்தடைதல் போன்றவற்றைக் குறித்துப் பெற்றோர்கள் கவலைகொள்கிறார்கள். 2015ஆம் ஆண்டில், பத்து மாநிலங்களில் ஆக்ஸ்ஃபாம் எடுத்த கணக்கெடுப்பின்படி பாதி பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வரவேயில்லை என்று தெரிவித்துள்ளது. NCERT புத்தகங்கள் மேம்பட்டிருந்தாலும், பழைய பொருளுணரா மனப்பாடக் கற்றல்முறை நீடிக்கிறது. ஆங்கிலம் பேசுவதில் சரளமாக ஒரு இந்திய மாணவனை விரைவில் உருவாக்கக் கூடிய ஹலோ ஆங்கிலம் மற்றும் கூகுள் போலோ போன்ற அற்புதமான பயன்பாடுகள் இருப்பதை ஆசிரியர்கள் மறந்திருக்கின்றனர். உலக நடப்பில் உள்ள கற்றல் புரட்சியிலிருந்து குறிப்பாக இந்திய குழந்தைகளைத் தடைசெய்வது, அவர்களை அறிவுசார் பொருளாதார வேலைவாய்ப்புகளிலிருந்தும், டிஜிட்டல் கற்றலிலிருந்தும் துண்டித்துவிடும் என்று கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.