இந்திய ரயில்வே நிர்வாகம் என்பது உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே துறையாக விளங்குகிறது. நாட்டின் நான்கு திசைகளையும் இணைக்கும் இந்திய ரயில்வே துறையை பல லட்சக்கணக்கான பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரும் பயன்படுத்திவருகின்றனர். இதில் பயன்படுத்தப்படும் ரயில்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவருகிறது.
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துவதற்கான முயற்சியையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் என்ஜின், ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் இந்திய ரயில்வேயின் மேற்குவங்க சித்தரன்ஞ்சன் ரயில் என்ஜின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது, அந்த என்ஜின் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த என்ஜின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும், மேலும் இனி அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த ரயில் என்ஜின்கள் செயல்பாட்டுக்குவரும் பட்சத்தில் ரயில்களின் வேகம் அதிகமாவதோடு, பயணிகளின் நேரம் மிச்சமாக வாய்ப்புள்ளது. முன்னதாக சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் சோதனை ஓட்டத்தில் 180 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.