டெல்லி: சீனாவுடனான மோதல்களுக்கு மத்தியில், இந்தியா- அமெரிக்கா இடையேயான நெருக்கம் அதிகரித்துவருகிறது. இதன் அடையாளமாக, இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்புக்காக அமெரிக்க நிறுவனத்திடமிருந்து இந்தியா இரண்டு ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த ட்ரோன்கள் இந்திய-சீன எல்லையான உண்மையான கட்டுப்பாட்டு எல்லையிலும் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தியா- சீன இடையேயான மோதலைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு அமைச்சகம் அவசர கொள்முதல் அதிகாரங்களின்கீழ் இந்த ட்ரோன்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியா வந்தடைந்த இந்த ட்ரோன்கள் அரக்கோணம் கடற்படை விமான நிலையத்தில் பறக்கும் நடவடிக்கைகளில் நவம்பர் 21ஆம் தேதி ஈடுபடுத்தப்பட்டதாக கடற்படையிலுள்ள உயர் அலுவலர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ட்ரோன்களை இயக்குவதற்கான உதவிகளை ட்ரோன்களை குத்தகைக்கு வழங்கிய அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த குழு வழங்கும் எனத் தெரிவித்த அந்த வட்டாரம், இந்த ட்ரோன்கள் ஒரு வருட காலத்திற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற 18 ட்ரோன்களை இந்தியா வாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.