இந்தியாவில் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் இந்தியாவில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் கொண்டாடப்படும். அதன்படி, வரும் ஜனவரி 26ஆம் தேதி சீனா தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட இருந்தது.
ஆனால், தற்போது சீனாவில் கொரோனோ வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அவ்விழாவை ரத்து செய்துள்ளதாக இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கொரோனோ வைரஸால் இதுவரை 25 பேர் உயிரிழந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் கூடும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. அதனால், தற்போது குடியரசு தின விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா வரவேற்பில் இரு நாட்டு உறுப்பினர்களும் உயர் அலுவலர்களும் கலந்துகொண்டனர். இதில், சீனாவில் துணை வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் சீன தூதருமான லுயோ ஜாவோஹுய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பேசிய சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, “2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மிக முக்கியமானதாகும். இரு நாடுகளுக்கிடையே உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்ற இரண்டாவது உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இந்த மாநாடு இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையே உறவு ஏற்பட்டு 70ஆவது ஆண்டு நிறைவடைந்ததால், 70 நிகழ்வுகளை இந்தியாவுக்கான சீன தூதரகம் நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் 7 பேருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு: சுகாதாரத் துறை எச்சரிக்கை