ஜனவரி 2019ஆம் ஆண்டு உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, எதிர்கால சாதனைகள் நேர்மறையான கண்ணோட்டத்தினை கொண்ட நுகர்வுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய சவால்களைச் சார்ந்திருக்கின்றன. திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு, கிராமப்புற இந்தியாவை உள்ளடக்கிய சமூகப் பொருளாதாரம், ஒரு ஆரோக்கியமான நிலையான எதிர்காலம் ஆகிய மூன்றும்தான் அந்தச் சவால்கள். இந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து கடந்த ஓர் ஆண்டாக இந்த மூன்று சவால்களையும் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அதன் முன்னேற்றத்தையும் இங்கு ஆராய்ந்து பார்ப்போம்.
இச்சவால்கள் குறித்து ஆராய்வதற்கு முன்பு கடந்த ஓராண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியைக் காண்பது அவசியம். 2018-2019ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.0 சதவீதமாக இருந்த வளர்ச்சியானது, 2019-2020ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. அது மேலும் சரிந்து இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீத அளவிற்குச் சரிந்தது.
உலக பொருளாதார மன்றத்தின் ( World Economic Forum) அறிக்கைபடி, இந்தியாவின் வளர்ச்சி வீதம் 2019இல் 7.5 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டது. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதார வளா்ச்சியின் துாண்டுகோலாக அமைந்திருந்தது. அத்தகைய கணிப்புக்கு மாறாக 2019-2020இல் இந்திய பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார காரணங்கள் மட்டுமன்றி உள்நாட்டுக் காரணிகளும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான பிரச்னைகள், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிகளின் செயல்திறனற்ற சொத்துகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள், கிராம வருமானங்களில் ஏற்பட்ட தேக்கநிலை ஆகியவையே பொருளாதார மந்த நிலைக்கு காரணமாகும். இந்திய பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இது ஒரு மந்த நிலையே தவிர சரிவு நிலை (Recession) அல்ல. இந்த மந்த நிலையில் ஓராண்டிற்குப் பிறகே ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.
1. திறன் மேம்பாட்டுப் பயிற்சி
இப்பிரச்னையின் முதல் சவாலான திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை பொறுத்தவரை NSSOவின் 2017-2018ஆம் ஆண்டு அறிக்கை குறிப்பிடத்தக்க காரணங்களை எடுத்துக் கூறியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மையானது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், உழைப்பில் பெண்களின் பங்கு பெருமளவு குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2004-2005ஆம் நிதியாண்டில் 42 சதவீதமாக இருந்து பெண்களுக்கான வேலைவாய்ப்பு, 2017-18இல் 22 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இருந்தும், 85-90 சதவீத பெண் தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் பணியாற்றிவருகின்றார்கள். ஆகவே, முறையான துறைகளில் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் அரசு, முறைசாரா துறைகளிலும் உற்பத்தியை பெருக்க வேண்டும். மக்கள்தொகைப் பெருக்கத்தின் அதிக எண்ணிக்கை, தொழிலாளர் சக்தி உருவாக்கத்துக்கு வித்திடும் என்பது அனைவரும் அறிந்ததே. உலகத்தில் பிற நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை கூடும் அதேநேரத்தில், நமது நாட்டில் தொழிலாளர் சக்தி பெருகுவது என்பது ஒரு சாதகமான சூழலேயாகும். மக்கள்தொகை ஈவை நாம் பெறவேண்டுமானால் மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல் வேண்டும்.
இத்தகைய மக்கள்தொகை ஈவானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதிக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் தென் மாநிலங்களின் ஈவு குறைவாகவும் வடமாநிலங்களின் ஈவு அதிகமாகவும் இருக்கும். தொழிலாளர்களிடையே காணப்படும் திறன் குறைபாடு அனைவரும் அறிந்ததே. மற்ற நாடுகளில் 70-80 சதவீத தொழிலாளர்கள் முறையான திறன் பயிற்சி பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 2.3 சதவீதம் தொழிலாளர்களே முறையான பயிற்சி பெற்றுள்ளனர். அதாவது இந்தியாவில் திறன் பயிற்சியில் மந்தமான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் திறன் வளர்ச்சி நிலத்தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய அளவிலான நிறுவன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்பு பெருமளவில் வரவேற்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பணிக்குழுக்கள் மாநில அளவில் உருவாக்கப்பட்டு அவற்றை 17 மத்திய அரசுத் துறைகள் மேம்படுத்த உதவி புரிகின்றன. இதுதொடர்பாக நிறைய செய்யப்பட்டிருந்தாலும், அடிமட்ட அளவில் சம்பந்தப்பட்ட அனைவரின் சம பங்களிப்போடு அனைத்து திட்ட முறைகளையும் நிரல்களையும் செயல்படுத்துவதற்கான முனைப்பு அவசியம்.
இத்தகைய திறன் மேம்பாட்டு விடயத்தில் சீனாவின் அனுபவம் இந்தியாவிற்குச் சிறந்த பாடமாக அமையும். 1996ஆம் ஆண்டு சீனாவில் இயற்றப்பட்ட தொழிற்கல்வி சட்டமானது ஒரு சரித்திர முக்கியம்வாய்ந்த நடவடிக்கையாகும். இதன் அடிப்படையில் சீன தொழில்நுட்ப, தொழிற்கல்வி, பயிற்சிமுறை ஆகியவை உருவாக்கப்பட்டன. சீனப் பொருளாதாரத்திற்கே உரிய பல குணாதிசயங்கள் உண்டு. அதனடிப்படையில் உள்ளூர் நிலையிலேயே திறன் வளர்ப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான மாற்றத்தையும் நெகிழ்வையும் கொண்டுள்ளன.
மேற்கூறிய சட்டமானது கல்வியையும் பயிற்சியையும் ஒன்றிணைக்கும் அம்சங்கள் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் தொழிற்சாலை நடைமுறைகளில் உள்ளூர் நிறுவன பங்களிப்பையும் உறுதிசெய்கிறது. மேலும், கிராமப்புறத்தில் இளைஞர்களுக்கு தொழிற்கல்வியோடு கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.
இது போலவே வேறு சில நாடுகளிலும் தொழிற்கல்வியோடு கூடிய பயிற்சி வழங்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனியைக் கூறலாம். இதுபோன்றதொரு இந்திய சட்டம் திறன் பயிற்சி குறைகளின் மீது கவனம் செலுத்துவதாக இருத்தல் வேண்டும்.
ஒருபுறம் மத்திய, மாநில அரசுகளின் குறிப்பிட்ட பொறுப்புகளையும், மறுபுறம் திறன் பயிற்சி நிலையங்களும் தொழிற்சாலைகளும் ஏற்க வேண்டிய பொறுப்புகளையும் வரையறைப்படுத்த வேண்டும். தென் கொரியா போன்ற நாடுகள் மேம்பட்ட திறன் பயிற்சிகளோடு தரமான பொதுக் கல்வியையும் வழங்கிவருகின்றன. இந்தப் பிரச்னையையும் நம் நாட்டு சட்டங்கள் கருத்தில்கொள்ளுதல் வேண்டும். ஆகவே, மக்கள் தாங்கள் பெறுகின்ற திறன் பயிற்சிகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் தரமான பொதுக்கல்வியும் இந்திய மக்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
2. சமூகப் பொருளாதாரம்
இரண்டாவது சவாலானது, கிராமப்புற இந்தியாவை உள்ளடக்கிய சமூகப் பொருளாதாரம். கடந்த ஓராண்டாக கிராம வருமானங்களிலும் ஊதியங்களிலும் மந்தநிலை காணப்படுகிறது. உள்கட்டமைப்பு முறைப்படுத்துதல், வலைதளம் நிதி ஆதாரம் போன்றவற்றில் கிராமப்புறம் / அரை-நகர்ப்புறம் ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளியை நீக்கி இணைக்க வேண்டியது தற்போதைய தேவையாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ஒதுக்கியுள்ள ரூ. 100 லட்சம் கோடி முக்கிய நடவடிக்கையாகும். ஆனால், இது குறித்த விளக்க அறிக்கை தேவை. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அரசின் கவனம் கிராமப்புறம் / அரை-நகர்ப்புறங்களின் மீது இருத்தல் வேண்டும். இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகளையும், சௌபாக்யா யோஜனா திட்டத்தின் மூலம் மின் இணைப்புகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதாரமான சூழலையும் வழங்கிவருகிறது. சமூகத்தில் பின்தங்கிய, பாதிக்கப்படக்கூடிய மக்கள் குறிப்பாக பெண்கள் இத்திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையானது 2022ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் மின் இணைப்பும், சமையல் எரிவாயு இணைப்பும் வழங்க உறுதியளித்துள்ளது. இந்த அறிவிப்பின் முன்னேற்றத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் காணலாம். கிராமப்புறங்களை உள்ளடக்கிய சமூகப் பொருளாதாரம் என்பதில் தற்போது தகவல் தொழில்நுட்பமும் அடங்கும். இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் மூலம் அரசின் அனைத்துத் திட்டங்களும் மின்னணு தகவல்தொடர்பு மூலம் சென்றடைய தேவையான வலைதளத் தொடர்பை மேம்படுத்தி டிஜிட்டல் இந்தியாவை அதிகாரப்படுத்த வேண்டும்.