கரோனா வைரஸ் தாக்கம் உலகையே அச்சுறுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மேலும், பிற நாடுகளுடனான எல்லைகள் மூடப்பட்டதுடன், விமானப் போக்குவரத்துச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கின் காரணமாக பிற நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில், மே 7ஆம் தேதி வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன் இரண்டாம்கட்ட நடவடிக்கையாக துபாய், அபுதாபிக்கு மூன்று ஏர் இந்தியா விமானங்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்தியர்களை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வருவதற்கான மிகப்பெரிய முயற்சிகளின் கீழ், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு முக்கிய நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வந்தே பாரத் மிஷனின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பணிபுரியும் பாதுகாப்புப் படை வீரர்கள், விமான நிலைய ஊழியர்கள், சுங்கத்துறை அலுவலர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விளக்கும் காணொலியை மத்திய சுங்கத் துறை வெளியிட்டுள்ளது.
இக்காணொலியில், கரோனா பேரிடர் காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன், நாட்டு மக்களுக்காக தங்களது சேவையை வழங்குவதாகக் கூறியுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் முதல் கட்டமாக 12 நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் நாடு திரும்பியிள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளி நாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்க மாநில அரசு, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இதையும் பார்க்க:ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!