ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காதி பிரிவில், அமைந்துள்ள கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. இதில், லான்ஸ் நாயக் கர்னைல் சிங் வீர மரணம் அடைந்தார்.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்- வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியா ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது, "ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காதி பிரிவில் கட்டுப்பாட்டுக் கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ஆயுதங்கள், துப்பாக்கி ஆகியவற்றை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் இரவு 8.30 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். முன்னதாக, பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிய ஆயுதங்கள், மோட்டார் ஷெல் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது" இவ்வாறு அவர் கூறினார்.