தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 மணி நேரம் நடந்த 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை: படைகளை விலக்கிக்கொள்ளும் இந்தியா! - படைகளை விலக்கிக்கொள்ளும் சீனா

டெல்லி: எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்திய, சீன ராணுவ உயர் அலுவலர்களுக்கிடையேயான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, எல்லையிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள தாங்கள் ஒப்புக்கொண்டதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Indian Army issues statement on LAC stand-off, disengegement requires verification
Indian Army issues statement on LAC stand-off, disengegement requires verification

By

Published : Jul 16, 2020, 4:14 PM IST

கடந்த மே 5ஆம் தேதி இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. அதையடுத்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீன ராணுவம் தனது படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது.

ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளும் மோதிக்கொண்டன. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், சீன தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின. இம்மோதலால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.

இதையடுத்து பதற்றத்தைக் குறைக்க ஜூன் 22ஆம் தேதி இரு நாட்டு உயர் அலுவலர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை காரசாரமாக நடைபெற்ற நிலையில், ஜூன் 30ஆம் தேதி மீண்டும் லெப்டினன்ட் ஜெனரல் நிலையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 30ஆம் தேதி நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் விரைவாக எல்லைகளில் படைகளை விலக்கிக்கொள்வதாக இருநாட்டு ராணுவங்களும் உறுதியளித்தன. மேலும், கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சீன ராணுவம் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இருப்பினும், ஜூலை 6ஆம் தேதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் வெளியுறுவுத் துறை அமைச்சர் வாங் யிடம் எல்லைப் பிரச்னை குறித்து வீடியோ காலில் பேசியதற்குப் பின்பே, படைகளை விலக்கிக்கொள்வதற்கான செயல்பாடுகள் நடைபெற தொடங்கின.

இச்சூழலில், கடந்த ஜூலை 14ஆம் தேதி சூசல் பகுதியில் லெப்டினன்ட் ஜெனரல் அளவிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்தியத் தரப்பில் கமாண்டர் ஹரிந்தர் சிங்கும் சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியு லின்னும் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்குத் தொடங்கிய இப்பேச்சுவார்த்தை இரவு 2 மணிவரை நீடித்தது (15 மணி நேரம்).

இதில், 8 மலைச் சிகரங்களைக் கொண்ட ஃபிங்கர் (Finger 8) பகுதியிலிருந்து சீனப் படை வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கல்வான், பாங்கோங் சோ ஆகிய பகுதிகளில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும், மேற்கொண்டு படைகள் முன்னேறி வரக் கூடாது எனவும் இந்திய தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் (LAC) சர்ச்சைக்குரிய வகையிலும் மோதல் போக்கை அதிகரிக்கும் விதமாகவும் இருக்கும் பெரும்பாலான பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ளவும் இருநாட்டு ராணுவமும் இப்பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது இதனை இந்திய ராணுவம் உறுதிசெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் எல்லைப் பகுதியிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தச் செயல்முறை சற்று சிக்கலானது என்பதால், நிலையான சரிபார்ப்பு அவசியமாகிறது. தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒத்துக்கொண்ட அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் - சீனாவை வலியுறுத்திய இந்தியா

ABOUT THE AUTHOR

...view details