வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான ஆம்பன் புயல் மே 20ஆம் தேதி மாலை ஒடிசா கடலோரப் பகுதியின் அருகே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கனமழை பெய்ததால் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களும் இதுவரை கண்டிராத வகையில் ஏற்பட்ட இந்த புயல் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. புயல் காற்றால் மரங்களும், மின் கம்பங்களும் அடியோடு சரிந்துள்ளன. பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாநிலங்களிலும் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பரவலால் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் இரு மாநில அரசுகளும் இந்த புயல் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியின் காரணமாக தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆம்பன் இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம், ஒடிசா மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ இந்திய - அமெரிக்க தொண்டு நிறுவனமாக சேவா இன்டர்நேஷனல் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.