மலபார் கடற்படை பயிற்சி இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கிடையே கடந்த 1992ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 2005ஆம் ஆண்டில் ஜப்பான் நாடு மலபார் பயிற்சியில் நிரந்தர உறுப்பினராக இணைத்துக்கொண்டது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக இணைந்தனர். இது சீனாவிற்கு சிறிது கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் மலபார் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தாண்டு ஆஸ்திரேலியாவை அழைக்கலாமா வேண்டாமா என்ற பேச்சு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ராணுவத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியா நாடு அழைக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக இறுதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு முடிவெடுக்க இந்திய கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பின்னர் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் என பல்வேறு கட்டங்கள் உள்ளன. தற்போது, இப்பிரச்னையில் இரண்டாம் கட்டத்தில் உள்ளோம். கடைசி முடிவு அரசியல் தலைவர்களின் கையில்தான் உள்ளது. ஆஸ்திரேலியாவுடன் பணிபுரிவதில் இந்திய கடற்படைக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கனவே, ஆசிண்டெக்ஸ் கடற்பயிற்சியில் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவும் ஜப்பானும் ஆஸ்திரேலியாவுடன் பயற்சியில் ஈடுபடுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்தபோதிலும், இந்தியா அழைப்பதற்கு சிறிது தயக்கம் காட்டிவருவதைப் பார்க்க முடிகிறது. இந்த தயக்கத்திற்கான மூன்று காரணங்களை மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர்.பருவா விவரித்துள்ளார்.