எல்லைப் பகுதியான லடாக்கில், சீனாவுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, "நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு ஒரு போதும் வீணாகாது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்து வேறுபாடுகள் மோதல்களாவதைத் தடுக்கும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். அதேவேளை நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒருபோதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. இருப்பினும் இந்தியாவைக் கோபப்படுத்தும் வகையில் யாரேனும் செயல்பட்டால் தக்க பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம். இந்தியர்களின் துணிச்சலும் வீரமும் உலகிற்குத் தெரியும்." எனத் கூறியுள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேருக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:எல்லையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் ஊர் விவரங்கள்