அரசுமுறைப் பயணமாக மூன்று நாள் இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் உள்துறை அமைச்சர் புலாட் போபோஜோனோவ், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
அப்போது, பொது விவகாரங்கள், பயங்கரவாத ஒழிப்பு, திறன் மேம்பாடு, உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது, எல்லைப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவை குறித்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், 2015, 2016ஆம் ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட உஸ்பெகிஸ்தான் பயணம், 2018 அக்டோபர் மாதம் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிபோவின் (Abdulla Aripov) இந்தியப் பயணம் ஆகியவை இருநாட்டு உறவில் புதிய உத்வேகம் உண்டாக்கியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பேச்சுவார்த்தையை அடுத்து, பயங்கரவாதம், ஆர்கனைஸ்ட் க்ரைம், ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை ஒன்று சேர்ந்து எதிர்கொள்ளும் பொருட்டு வியூக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருநாட்டு உள்துறை அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.