பல அரசியல் தலைவர்கள், வாழும்போது வில்லனாகவும் இறப்புக்கு பிறகு ஹூரோவாகவும்தான் கட்டமைக்கப்படுகின்றனர். ஆனால், இதற்கு நேரெதிர் மாறாக விளங்கியவர் நேரு. அவர் இருந்தவரை சுதந்திர இந்தியாவின் ஹீரோவாக விளங்கிய நிலையில், நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கும் அவர் தான் காரணம் என ஒரு சிலர் இன்றும் தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்திவருகின்றனர். 'இந்தியாவிற்கு ஜனநாயகம் கிடைத்ததற்கு காரணம் நேருதான் என காங்கிரஸ் நம்மை நம்ப வைக்க பார்க்கிறது. ஆனால், இது உண்மை அல்ல' என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறார்.
ஆனால், புகழ்பெற்ற ‘நியூ யார்க் டைம்ஸ்’ பத்திரிகை, நேருவை நவீன இந்தியாவின் சிற்பி என வருணிக்கிறது. 'ஜனநாயகத்தின் தலைமை சிற்பி நேரு என்பதற்கு மாற்று கருத்தே இல்லை' என வரலாற்றாசிரியர் குஹா கூறுகிறார். இப்படி இருவிதமான கருத்துகள் நிலவி வருகின்றன. உண்மைதான் என்ன? நேரு ஹூரோவா? வில்லனா?. இவை அனைத்துக்கும் வரலாறு பதிலளிக்கிறது.
அரசியலமைப்பில் நேருவின் பங்கு
அரசியலமைப்பில் இந்தியாவை சுதந்திர குடியரசு நாடாக பிரகடனப்படுத்தியதில் நேருவின் பங்கு முக்கியமானது. மக்களாட்சி நிலவும் நாட்டில், அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்கி கருத்து மற்றும் மதச் சுதந்திரத்தை நிலைநாட்டியவர் நேரு. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடியினர் என அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்தார். 1937ஆம் ஆண்டு, நில உடைமையாளர்களுக்கு மட்டுமிருந்த வாக்குரிமையை வயது வந்த அனைவருக்கும் மாற்றியும், பல கட்சி முறையை சாத்தியப்படுத்தியும் இந்தியாவை ஜனநாயக நாடாக பிரகடனப்படுத்தினார். இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு தடையாக இருந்த சமூக சமத்துவமின்மை, பிரிவினைவாதம் ஆகியவற்றை துடைத்தெறிய அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்து மதசார்பின்மையை தூக்கிப் பிடித்தார்.
உலக அரசியலில் நேரு
இனவாதம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்த நேரு, ஆசிய நாடுகளின் ஒற்றுமைக்காகவும் ஆசிய ஆப்பிரிக்கா நாடுகள் இணக்கமாக செயல்படவும் உலக அமைதி நிலைபெறவும் குரல் கொடுத்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் வல்லாதிக்க சக்திகளாக உருவெடுத்தன. உலக நாடுகள் அனைத்தும் இவ்விரண்டு நாடுகளுக்குப் பின் அணி வகுத்தன. ஆனால், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணி பயன்களை அடையும் நோக்கில் நேரு அணி சேரா கொள்கையை வகுத்தார். இதன்மூலம், வளரும் நாடுகளின் முன்னணி நாடாக உருவெடுத்த இந்தியாவுக்கு தனித்துவமான அடையாளம் கிடைத்தது.
சோசலிச நேரு
சமூக மாற்றத்தில் கவனம் செலுத்திய நேரு, சமத்துவமின்மையை களைத்து வளர்ச்சியை முன்னெடுக்க சோசலிச கொள்கையை கையில் எடுத்தார். சோவியத் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில்மயமாக்கலை கண்டு வியந்த நேரு, அதனை இந்தியாவில் செயல்படுத்த விரும்பினார். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 14 விழுக்காட்டினர் மட்டுமே படித்தவர்கள் இருந்தனர். வறுமையால் நாடு வாடியது. இதிலிருந்து மீள்வதற்கு பொதுவுடைமை கொள்கை இன்றியமையாததாக இருந்தது.
மற்றவர்கள்போல் சிறை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக நேரு ஒரு போதும் மன்னிப்பு கடிதம் எழுதியது கிடையாது. அந்த தண்டனையைக் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தியவர் நேரு. 1921ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில், அரசியல், பொருளாதாரம், அறிவியல், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகள் குறித்த 188 புத்தகங்களை நேரு படித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நில சீர்திருத்தத்தின் முக்கியத்துவம், நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு குறித்தும் அறிந்துகொண்டார்.
கலப்பு திருமணத்திற்கு அங்கீகாரம், சொத்துரிமையில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் உரிமை, பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்றவற்றை சட்டம் மூலம் நிறைவேற்ற விரும்பிய நேரு, சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் உதவியோடு இந்து சட்ட மசோதாவை கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்த பலரே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேருவால் மசோதாவை சட்டமாக்க முடியவில்லை. இறுதியில், அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், நேருவின் தொடர் முயற்சியால் பல்வேறு இன்னல்களைத் தாண்டி பல திருத்தங்களுடன் இந்த மசோதா சட்டமானது.
நேருவின் தோல்விகள்
இந்தியா - பாகிஸ்தான் பிரிவு, மதவாதம், சாதியம், இடது தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற எண்ணிலடங்காத பிரச்னைகள் நேருவுக்கு சவால்விட்டன. அனைத்தையும் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக கையாண்ட நேரு, சில பிரச்னைகளில் தோல்வியை தழுவினார். சீனாவை நட்பு நாடாக ஆக்கிக் கொள்ள விரும்பிய நேருவுக்கு, துரோகம் பரிசாக கிடைத்தது. அந்நாட்டின் உள்நோக்கத்தை நேரு புரிந்து கொள்ளாத காரணத்தால், சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா வீழ்ந்தது. ஷேக் அப்துல்லாவை கைது செய்ததன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் மிகப் பெரிய தவறிழைத்தார் நேரு.
நேரு ஹீரோவா? வில்லனா? என்பது அவரவர் புரிதலுடன் விட்டுவிட வேண்டும். ஆனால், இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒருவர் நேரு என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.
இதையும் படிங்க: உலகத்தின் முதல் சோசலிச ஜனநாயகவாதி நேரு!