சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் புயல் வேகத்தில் பரவி வருகிறது. உலக அளவில் இப்பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை நாட்டில் 4,10,461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,254 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்தைக் கடக்கும் என மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆராய்ச்சியாளருமான பிரமர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பயோ ஸ்டாஸ்டிக்ஸ் துறையின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரமர் முகர்ஜி இது குறித்து பேசுகையில், "தற்போதைய சூழலில் நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அதிகமாக ரேபிட் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 0.5 விழுக்காடு மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆறு மில்லியனில் இருந்து 54 மில்லியன் வரை சோதனைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது. நிச்சயம் அதற்கு பல நாள்களாகும். எனவே அதற்கு மாற்று வழியாக ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.