கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு சார்பாக வந்தே பாரத் மிஷன் எனப் பெயரிட்டு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் மீட்டு வரப்படுகின்றனர்.
மே 7ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை முதல் கட்ட மிஷனில் 12 நாடுகளிலிருந்து 15 ஆயிரம் பேர் தாயகம் திரும்பினர். இதையடுத்து மே 17ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட மிஷன் செயல்படுத்தப்பட்டது. இந்த இரண்டு மிஷனிலும் சேர்த்து 45 ஆயிரத்து 216 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் வந்தே பாரத் மிஷனை ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.